உலக வரலாறு, இந்திய வரலாறு, தமிழக வரலாறு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் குரூப் 1 தேர்வில் மட்டும் ஆங்காங்கே உலக வரலாறு தலை காட்டுகிறது. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் எப்போதோ அத்தி பூத்தாற் போல் கேள்வித்தாள், ’இந்தியாவுக்கு வெளியே செல்கிறது’!. இந்திய வரலாறு கூட, முன்பு போல் இல்லை. போட்டித் தேர்வுகளில், ’குப்தர்களும் மெளரியர்களும் ஆட்சி செய்த காலம்’ எல்லாம் மலையேறிவிட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2A தேர்வில், இந்தப் பகுதியிலிருந்து ஒரே ஒரு வினா கூட கேட்கப்படவில்லை. கடந்த குரூப் 4 தேர்வில், மெளரிய வம்சம் பற்றி ஒன்று, விஜய நகரப் பேரரசு பற்றி ஒன்றுமாக இரண்டு வினாக்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, மொத்தமே 3 மதிப்பெண்.
இதுவே, இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பாக, 6 முதல் 10 கேள்விகள் கூட வரலாம். தேர்வுக்குத் தயார் ஆகிறவர்கள், கேள்வி கேட்கும் முறையில் (pattern) இது மாதிரியாக, போக்கு (trend) மாறி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப, படிக்க வேண்டும். இது மிக முக்கியம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ’இந்திய வரலாறு’ ஒன்றாகத்தான் இருந்தது. சமீபத்தில் இது, இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது. சுதந்திரப் போராட்ட வரலாறு மட்டும், ’இந்திய தேசிய இயக்கம்’ (Indian National Movement) என்று தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவிலிருந்துதான் ஏராளமாகக் கேட்கப்படுகின்றன.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தொடங்கி, ஐ.ஏ.எஸ். தேர்வு எனப்படும் யு.பி.எஸ்.சி. குடியுரிமைப் பணிகளுக்கான தேர்வு வரை, அனைத்திலும் மிக முக்கிய இடம் வகிப்பது – இந்தியாவின் விடுதலைப் போராட்டம். அரசுப் பணியில் சேர வேண்டும் என்று யாருக்கெல்லாம் ஆசை இருக்கிறதோ, அவர்கள் எல்லாரும் தவறாமல் இந்திய சுதந்திரப் போரட்டம் பற்றி, ஆதியோடு அந்தமாய், முழுதாய்த் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்கள் மட்டுமன்றி, சுதந்திரப் போராட்டம் தொடர்பான பல்வேறு நூல்களையும் ஆழ்ந்து படிப்பது மிகவும் பயன் தரும். சுதந்திரத்துக்கு முந்தைய வரலாற்றில் நாம் நன்கு படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பகுதி இருக்கவே செய்கிறது. அதுதான், முகலாய ஆட்சி.
பாபர், அக்பர், ஷாஜஹான், ஒளரங்கசீப் இல்லாத இந்திய வரலாறா…? அதிலும் அக்பரின் ஆட்சிச் சிறப்பு, ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால்… தவிர்க்கக் கூடாத முக்கிய பகுதிகள். இதே போன்றுதான் பானிப்பட்டு யுத்தங்களும், வீர சிவாஜி வரலாறும். அரசுப் பணிக்கு வருகிறவர்கள், நமது தேசத்தின் சரித்திரத்தை ஆழப் படித்தவர்களாய், நன்கு புரிந்தவர்களாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தானே…? குரூப்4 தேர்வுக்கும் அதே விதிமுறைதான்.
போட்டித் தேர்வுக்குத் தயார் செய்கிறவர்கள், எங்கிருந்து தொடங்கலாம் என்று யோசித்தே மலைப்புடன் நாள்களைக் கடப்பதைப் பார்க்கலாம். ’இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு’. இதுதான் தொடக்கப் புள்ளி. தயக்கம் தீர்ந்ததா…? இந்தப் பகுதிக்கு என்றே, நான்கைந்து நாள்களை ஒதுக்கினால் கூடப் பரவாயில்லை. ஒவ்வோர் ஆண்டாக, ஒவ்வொரு போராட்டமாக, ஒவ்வொரு தலைவராக, தேர்ந்தெடுத்துப் படித்து, குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. கணிசமான மதிப்பெண்ணை வெகு எளிதில் பெற முடியும் என்பதால், குரூப்4 தேர்வுக்குச் செல்கிறவர்கள், இந்தப் பகுதியில் தனி கவனம் செலுத்திப் படிப்பது, தேர்வில் வெற்றியை உறுதி செய்யும்.
குரூப் 4 தேர்வைப் பொறுத்தமட்டில், நாம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பகுதி – ’தமிழக வரலாறு’.
தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழர் கலை, கலாசாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அதிகார பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன பொருள்…? எக்காரணம் கொண்டும் இப்பகுதிகளைப் புறக்கணிக்காதீர்கள் என்பதுதானே..? தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களின் ஆட்சி பற்றி நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமன்றி, பல்லவர், நாயக்கர் ஆட்சிகளும் சேர்ந்ததுதானே தமிழக வரலாறு..?
இராஜராஜ சோழன், இரண்டாம் நெடுஞ்செழியன், சேரன் செஞ்குட்டுவன், மகேந்திர பல்லவர், திருமலை நாயக்கர்… இவர்கள் ’வராமல்’ தமிழகத்தில் ஒரு போட்டித் தேர்வா…? தமிழ் மன்னர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு, இவர்களின் ஆட்சி நிர்வாகச் சிறப்பு, நீதி நெறிகளுக்கு இவர்கள் அளித்த முக்கியத்துவம், நம் நிலம் கடந்து பெற்ற வெற்றி, பெரும் கடல் கடந்து செய்த வாணிபம்.. தவறாமல் தேர்வுகளில் இடம் பெறும்.
தமிழ் மொழித் தாள் என்று தனியாக இருந்தாலும், பொதுப் பாடத்தாளிலும், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் குறித்த கேள்விகள் இடம் பெற அதிக வாய்ப்பு உண்டு. ஆங்கிலம் தேர்வு செய்தவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவும். திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பாரதியார் பாடல்கள்… எல்லாம், மொழி சார்ந்த இலக்கியங்கள் மட்டுமே அல்ல; அவை, நம் இனத்தோடு ஒன்றிப் போய் இருக்கிற, நம் தனி அடையாளங்கள். மறந்து விட வேண்டாம். தமிழ் வேந்தர்கள் எழுப்பிய ஆலயங்கள், ஆதரித்த கலைகள், இலக்கியங்கள், கட்டிய அணைகள், காட்டிய கொடைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள், கட்டாயம் மனதில் கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள். தேர்வுக்காக இல்லையென்றாலும், நம் இனத்தின் மேன்மை குறித்து நாம் அனைவரும் தெரிந்துகொள்வது, கடமைதானே…?
‘தமிழக வரலாறு’ பகுதியிலிருந்து மிகக் கணிசமான அளவுக்குக் கேள்விகள் வருகின்றன. சுமார் 10 வினாக்கள் வரை எதிர்பார்க்கலாம். இதை விட மகிழ்ச்சியான செய்தி என்ன இருக்க முடியும்? இவை அல்லாமல், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலம் (post Independence period) மிக முக்கியம். ஜவஹர்லால் நேரு தொடங்கி நரேந்திர மோடி வரையிலான சுமார் 70 ஆண்டு கால இந்திய அரசியல் வரலாறு. இதே போலவே, 1947 முதல் 2017 வரை, தமிழக அரசியல் நிகழ்வுகள்.
திராவிட இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்; திராவிடத் தலைவர்களின் பங்களிப்பு; சமூக நீதிக் கோட்பாடு; சாதி மறுப்பு; பெண்ணுரிமை; திராவிட ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள்…. மிக மிக முக்கியமான பகுதி. கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எல்லாத் தேர்வுகளிலும் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு, பிரதான இடம் வகிக்கிறது. ஆகவே சிறப்புக் கவனம் செலுத்திப் படிக்கவும். வெற்றிக்கான சூட்சுமம் இதில்தான் அடங்கியிருக்கிறது.