இது வரை நாம் குரூப்4 தேர்வின் பல்வேறு பகுதிகளின் அடிப்படை விவரங்களைப் பார்த்தோம். இன்றுடன் இத்தொடரின் முதல் பாகம் முற்றுப் பெறும். நாளை முதல், பாடங்களின் உள்ளே நுழைய இருக்கிறோம்.
அதற்கு முன்பாக.. இதுவரை சொல்லப்பட்ட விவரங்களைக் கொண்டு, தேர்வுக்குத் தீவிரமாகத் தயார் செய்து கொள்ளுங்கள். இந்திய வரலாறு, அரசமைப்பு சட்டம் போன்ற பகுதிகளில் இருந்து தொடங்கினால் எளிதாக இருக்கும். கணிதம், அறிவியல் அல்லது மொழிப் பாடங்கள்தான், எளிதாக இருக்கும் என்று கருதுகிறவர்கள், அங்கிருந்தும் தொடங்கலாம். தொடங்க வேண்டும். அதுதான் முக்கியம்.
‘சுய தயாரிப்பு’தான் இத்தொடரின் பிரதான நோக்கம். அதாவது, தேர்வர்களைப் படிக்கச் செய்ய வேண்டும். நாள்தோறும் இத்தொடரில் இடம் பெறும் கருத்துகள், சுயமாகப் படிக்கிறவர்களுக்கு உதவி செய்ய மட்டுமே. என்ன சொல்ல வருகிறோம் புரிகிறதா…? இத்தொடரை மட்டும் வாசித்து விட்டு, போட்டித் தேர்வுக்குப் போவது இல்லை; இங்கே தரப்படும் ஆலோசனைகளைப் படித்து, தங்களுக்கு ஏற்றவாறு திட்டம் இட்டுப் படிக்கவும்.
சுய முனைப்பு; சுய முயற்சி; சுய வாசிப்பு. இதுவே சுய தயாரிப்பு. சரிதானே…?
இனி.. தமிழ்நாட்டில் இருந்து வருகிற இளைஞர்கள் எல்லாருமே மிக நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்களே… அது எப்படி? தில்லி உட்பட, வட மாநிலங்களில் எங்கு சென்றாலும், நம்முடைய ஆங்கிலப் புலமையைப் பற்றி மக்கள் வியந்து பேசுவதைக் கேட்கலாம். இது ஒன்றும் வெற்றுப் புகழ்ச்சி அல்ல; சாதாரணமாக தெருக்களிலே நடந்து செல்கிற போது, கடைகளிலே உரையாடும் போது, பேருந்து, ரெயில் பயணத்தில் சக பயணிகளுடன் பேசுகிற போது, வட மாநில மக்கள் சொல்லுகிற விஷயம்தான் இது. நம்முடைய ஆங்கிலப் புலமை, தானாய் வந்தது அல்ல; தாய் மொழியான தமிழில் நாம் கொண்டு இருந்த ஆழ்ந்த அறிவுதான், பிற மொழிகளிலும் நம்மைப் புலமை பெற வைத்தது. மொழியறிவுதான் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இங்கிருந்தே தேர்வுக்கான தயாரிப்புப் பணிகள் தொடங்குகின்றன.
நமக்கெல்லாம் நன்கு தெரியும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, ஆங்கில வழிக் கல்வி பயிலுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் விளைவாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வுக்கு, ஆங்கிலத்தை விருப்ப மொழியாகத் தேர்வு செய்கிறவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது. ஆங்கில மொழித்தாள் பற்றி பார்ப்பதற்கு முன்னால், இத்தேர்வர்களுக்கு ஒரு வேண்டுகோள்; ஒரு நினைவூட்டல். என்னதான் ஆங்கில மொழியை விருப்பத் தாளாக எடுத்து இருந்தாலும், தமிழ் மொழியின் சிறப்புகள், திருக்குறள், ஆத்தி சூடி, பாரதியார் பாடல்கள் போன்ற முக்கியமான பகுதிகளை அவசியம் படியுங்கள். போட்டித் தேர்வுக்காக இல்லை என்றாலும், வாழ்க்கைக்கு இவை, மிக இன்றியமையாதன. மறந்து விட வேண்டாம்.
குரூப்4 தேர்வுக்கு, பொது ஆங்கிலத்துக்கான பாடத் திட்டம் (syllabus) தேர்வாணைய இணைய தளத்தில் இருந்து தவறாமல் பதிவிறக்கம் (’download’) செய்து, அதன் ‘print-out’ கையில் வைத்துக் கொள்ளவும். என்ன படிக்க வேண்டும் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது கையில் உள்ள ‘print-out’ பார்த்து, திட்டம் இட்டுக் கொள்ளவும்.
பொது ஆங்கிலப் பாடத் திட்டத்தில் மூன்று பாகங்கள் உள்ளன.
Part A – 20 உட்பிரிவுகளைக் கொண்டு இருக்கிறது. பயந்து விட வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் சில நிமிடங்கள் செலவிட்டாலே போதும்; தெரிந்து கொண்டு விடலாம். ‘articles’, ‘preposition’, ‘synonyms’, ‘antonyms’ போன்ற பல அம்சங்கள் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆனவைதாம். சரியான ‘tense’, ‘voice’ தேர்ந்தெடுத்தல், degrees of comparison ஆகியனவும் பள்ளி வகுப்புகளில் பயின்ற அடிப்படை ஆங்கில இலக்கணம்தான்.இது அல்லாமல், ‘comprehension’ பகுதி, மிக எளிதில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு நல்ல வழி.
இதற்குத்தான் பயிற்சி தேவைப்படும். மீண்டும் மீண்டும் சொல்கிறோம். சுய தயாரிப்புப் பணியில் முக்கிய பகுதியே, கடந்த ஆண்டுகளின் வினாத் தாட்களை, முயற்சித்துப் பார்ப்பதுதான்.
’comprehension’ – என்பது என்ன…?
ஏதேனும் ஒரு பத்தி (’பாரா’) கொடுக்கப் பட்டு இருக்கும். இந்தப் பத்தியில் உள்ள கருத்தின் அடிப்படையில் சில கேள்விகள் தரப்படும். அதற்கு பதில் தர வேண்டும். கேள்விகள் இரண்டு வகையாக இருக்கலாம். ஒன்று, பத்தியில் இருந்து நேரடியாக பதில் எடுத்து எழுதுவது. அதாவது, நாம் தர வேண்டிய விடை, பத்தியில் இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்து எடுக்க வேண்டும். மற்றொரு வகை, பத்தியில் உள்ள கருத்தின் அல்லது வாக்கியம், சொல்லின் அடிப்படையில், ‘வெளியில்’ இருந்து விடை கண்டுபிடிப்பது. இந்த விடை, கொடுக்கப் பட்டு இருக்கும் நான்கு தேர்வுகளில் (options) இருக்கும். அவற்றில் ஒன்றைத்தான் நாம் கண்டு பிடிக்க இருக்கிறோம். உதாரணத்துக்கு, ’அவன், பிறரிடம் கனிவானவன்’ என்று பத்தியில் உள்ளது. (He is kind to others) கீழே ஒரு கேள்வி – ’அவன் எப்படிப் பட்டவன்?’ இதற்கான பதில், பத்தியிலேயே உள்ளது. மற்றொரு கேள்வி – கனிவு (kind) என்பதற்கு எதிர்ச்சொல் என்ன…? இதற்கான பதில், பத்தியில் இல்லை. நாமாக ‘கண்டுபிடிக்க’ வேண்டும். a) calm b) quiet c) cunning d) cruel. என்று, நான்கு ‘options’ தரப் பட்டு இருக்கின்றன. சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும். இப்போது புரிந்து இருக்கும். பத்தியிலேயே பதில் இருக்கலாம்; பத்தியில் சொற்கள் / வாக்கியங்கள் / கருத்துகளைப் புரிந்து கொண்டு, நாம் பதில் சொல்ல வேண்டி வரலாம். குரூப்4 தேர்வைப் பொறுத்த மட்டில், பொதுவாக, ஒரு ‘comprehension’ பகுதியில், 5 வினாக்கள் இருந்தால், ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் மட்டுமே, ‘கண்டுபிடித்து’ பதில் சொல்வதாக இருக்கும்.
Part B - இலக்கியம். (Literature). இந்தப் பகுதியில் 10 உட்பிரிவுகள் உள்ளன. அநேகமாக எல்லாமே பள்ளிப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவைதாம். என்னென்ன பாடங்கள் (prose), என்னென்ன பாடல்கள் (poetry) என்னென்ன கட்டுரைகள் (essays) என்னென்ன உரைகள் (speeches) படிக்க வேண்டும் என்பதை, பாடத் திட்டத்தை ஒருமுறை பாரத்தாலே விளங்கி விடும். இவை அனைத்தும் பள்ளிப் பருவத்தில் படித்த பகுதிகள்தாம் என்பதால், யாருடைய உதவியும் இன்றி, தானே சுயமாகத் தயரித்துக் கொள்வதில் எவ்வித சிரமும் இருக்காது.
Part C. இப்பகுதிதான், பொது ஆங்கிலத் தாளின் மிக எளிய பகுதி. நூலாசிரியர்களும் அவர்களின் படைப்புகளும் பற்றிய இப்பகுதியை, முழுவதுமாகப் படித்து முடிக்க சுமார் ஆறு மணி நேரம் செலவிட்டால் போதுமானது. நினைவில் வைத்துக் கொள்வதும் கடினமானதாக இராது. காரணம் - எல்லாமே, நன்கு தெரிந்த விவரங்கள். நூலாசிரியர் எந்த நாட்டை சேர்ந்தவர், படைப்புகளில் வரும் மேற்கோள்கள், கதை மாந்தர்களின் குண நலன்கள்… இவைதாம் இப்பகுதியின் அம்சங்கள். எந்தக் குழப்பத்துக்கோ சந்தேகத்துக்கோ இடம் அளிக்காத, வெளிப்படையான தெளிவான கேள்விகள்; அதற்கேற்றாற் போல், எளிதில் தேர்வு செய்து விடக் கூடிய ’options’ என்று ‘candidate – friendly’ பகுதி இது. ஒரே ஒரு சவால்தான். இது மிகவும் எளிய பகுதி என்பதனால் தேர்வு எழுதுகிறவர்களில் பெரும்பாலோர், இப்பகுதியில் முழு மதிப்பெண்கள் பெறுபவர்களாக இருப்பார்கள். ஆகவே இதில் ஒரு தவறான விடை அளித்தாலும், தரவரிசைப் பட்டியலில் நாம் பின் தங்கி விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. கவனத்துடன், சரியான விடையைத் தேர்ந்தெடுத்து முழு மதிப்பெண்களை உறுதி செய்து கொள்ளவும்.
ஆங்கிலத்தில் நல்ல சொல்லாட்சி (vocabulary) கொண்டவர்களாக இருந்தால், பொது ஆங்கிலம் தாளுக்கு, ஓரிரு நாட்களுக்கு மேல் செலவிடத் தேவை இல்லை. வாய்ப்பு கிடைக்குமானால், ஆங்கில இலக்கணம் (Grammar) தொடர்பான சில விளக்கங்களைப் பிறகு பார்க்கலாம். இப்போது நாம், பாடங்களுக்குள் புக இருக்கிறோம். முதலில்….. இந்திய அரசமைப்பு சட்டம்!