TNPSC பொதுப்பாடத்தாளுக்கு என்னவெல்லாம் படிக்கணும்?

'இன்றைய இளைஞர்களுக்கு, நாளிதழ்கள் படிக்கிற வழக்கமே இல்லாமல் போயிடுச்சி....'. பெரியவர்கள் வருத்தப் படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். 'பேப்பர்' படிக்கலைன்னா என்ன...? அதனால் என்ன குறைஞ்சிடப் போவுது...?'

நடப்பு நிகழ்வுகள் - 'Current Affairs'.

எல்லாப் போட்டித் தேர்வுகளிலும் மையப் புள்ளியாக விளங்குவது இதுதான். ஒரு காலத்தில், G.K. அதாவது General Knowledge எனப்படும் 'பொது அறிவு' என்றாலே, நாட்டு நடப்புகள் பற்றிய கேள்விகளாகத்தான் இருந்தது. சமீபத்தில்தான் இது, பாட அறிவையும் இணைத்து, 'பொதுப் பாடம்' (General Studies') என்று மாற்றியமைக்கப்பட்டது. ஆனாலும், 'நடப்பு நிகழ்வுகள்' தொடர்ந்து முக்கிய இடம் வகித்து வருகிறது.


'வினாடி - வினா' நிகழ்ச்சி (Quiz Prgrm) முன்பெல்லாம் வானொலிகளில் மிகப் பிரபலமாக இருந்தது. வேறு யாரையும் விட, இளைஞர்கள்தாம், இந்த நிகழ்ச்சியின் தீவிர நேயர்களாக இருந்தனர். இதே நிலை இன்றும் தொடர்ந்து இருந்தால்....? போட்டித் தேர்வுகளை, 'ஊதித் தள்ளி' விடலாம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மிகவும் சுவாரஸ்யமான 'வேலை'தானே..? பிறகு ஏன், சுணக்கம் காட்ட வேண்டும்....?

தேர்வுக்குத் தயார் செய்வது என்கிற நோக்கத்துடன் அல்லாமல், இயல்பாகவே நாள்தோறும் செய்தித் தாள்களைப் படிக்கிற வழக்கம் மட்டும் வந்து விட்டால், இந்தப் பகுதி, உண்மையில் ஏராளமான மதிப்பெண்ணை வாரி வழங்கக் கூடியது.சரி. செய்தித் தாள்களைப் படிப்பதில் என்னென்ன கவனிக்க வேண்டியிருக்கிறது...? அதற்கு முன்னதாக, 'நடப்பு' நிகழ்வுகள் என்றால் என்ன...? தேசிய அல்லது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுதான் - 'நடப்பு நிகழ்வுகள்' கீழ் வரும். ('events of National / International significance')  இதற்கு என்ன பொருள் என்றால், 'உள்ளூர்' செய்திகள், 'நடப்பு நிகழ்வுகள்' ஆகாது. இப்படிச் சொல்வதனால் இந்தச் செய்திகள் எல்லாம் தேவையற்றது; படிக்கக் கூடாது என்று, கருதி விட வேண்டாம்.

நாம் வசிக்கும் பகுதியில் உள்ள பிரச்னைகள், போக்குவரத்து மாற்றங்கள், வானிலைக் குறிப்புகள், விலைவாசி நிலவரம், தண்ணீர், மின்சார சப்ளை பற்றிய விவரங்கள்... இவையெல்லாம் உள்ளூர் செய்திகள். இவற்றிலிருந்து போட்டித் தேர்வுகளில் கேள்விகள் வரப் போவதில்லை. அதற்காக இவை எல்லாம் தேவையற்ற செய்திகள் ஆகி விடுமா என்ன...? அன்றாட வாழ்க்கைக்கு, எதிர்காலப் பயன்பாட்டுக்கு உதவுகிற செய்திகள் பல உண்டு. இதே போல,போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படுகிற செய்திகள் என்றும் உண்டு. இது தெரிந்து செய்தித்தாள்களை வாசித்தால், நடப்பு நிகழ்வுகள் பகுதி, மிக எளிதாகி விடும்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு என்னவெல்லாம் படிக்கலாம்....? 

இதோ பட்டியல்:
வரலாறு: தேசிய அடையாளங்கள்; செய்தியில் வந்த முக்கிய மனிதர்கள், இடங்கள்; விளையாட்டுப் போட்டிகள்; 

நூல்கள் - ஆசிரியர்கள்; பதக்கங்கள், விருதுகள்; அண்டை நாடுகள். 
அரசியல்: பொதுத் தேர்தல்கள்; அரசியல் அமைப்பு முறை; அரசுகளின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள். 

பொருளாதாரம்: தற்போதைய சமூக - பொருளாதாரப் பிரச்னைகள். 
அறிவியல்: சமீபத்தில் சாதிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள்; புதிய தொழில்நுட்ப அறிமுகங்கள் ஆகியன.

மேலும் விவரங்கள், தேர்வாணையத்தின் இணையதளம் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். மேற்கூறிய தலைப்புகளின் கீழ் வரும் செய்திகளைப் படித்தால் போதும். இந்தக் குறிப்பு போதாது என்போருக்காக:

ஒரு நாளிதழின் இந்தப் பகுதிகள் முக்கியமானவை - முகப்புப் பக்கத்தில் உள்ள தலைப்புச் செய்திகள், தலையங்கக் கட்டுரை, தேசம், உலகம் என்று மேலே குறிப்பிடப் பட்டிருக்கிற பக்கங்கள், வணிகப் பக்கம், விளையாட்டுப் பக்கத்தில் வரும் தலைப்புச் செய்திகள் ஆகியன.

எத்தனையோ ஆண்டுகளாக 'பேப்பர்' படிக்கிறோம். இதை நாங்கள் கவனிக்கவே இல்லையே... என்று பலர் சொல்வதுண்டு. அது என்ன....? ஒரு நாளிதழின் ஒவ்வொரு பக்கத்திலும், மேலே ஒரு குறிப்பு இருக்கும். 'மாவட்டம்', 'மாநிலம்', 'தேசம்', 'உலகம்' என்றெல்லாம் இடம்பெற்றிருக்கும். அதற்கான செய்திகள், அதற்குள் அடங்கியிருக்கும். உதாரணத்துக்கு, வட கொரியா பற்றிய செய்தி எனில் அது, 'உலகம்' என்று குறிப்பிட்டிருக்கும் அந்தப் பக்கத்தில் மட்டுமே வெளிவரும். ஆந்திர மாநிலச் செய்தி...? 'தேசம்' பகுதி. இப்படி ஒவ்வொரு செய்தியும் தனித்தனியே வகைப்படுத்தப்படுகின்றன (classified). இந்த வகை அறிந்து வைத்துக் கொண்டால், முந்தைய ஆண்டுகளின் கேள்விகளைப் பார்த்துக் கொண்டால், தேர்வுக்கு எது முக்கியம், எதையெல்லாம் குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நமக்கு விளங்கி விடும். இந்த 'சூட்சுமம்' தெரியாததால், 'நடப்பு நிகழ்வுகள்' பகுதிக்கு என்ன படிக்க வேண்டும் என்று தெரியாமல் திணற வேண்டி வருகிறது.

சரி. நாளிதழ்கள் மட்டுமே போதுமா...?

கூடவே, 'ஆண்டுப் புத்தகம்' (Year Book) வாசிப்பும் அவசியம். கடந்த ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல; பல்வேறு சம்பவங்களைப் பற்றிய பின்னணி, அதன் விளைவுகள் பற்றிய கட்டுரைகளும் ஆண்டுப் பதிப்பில் இடம் பெறுகின்றன. இதுவெல்லாம் நமக்கு மிகவும் பயன்படும். இவையல்லாமல், தேசிய, சர்வதேச செய்திகள் பற்றிய தொலைக்காட்சிச் செய்திகள், உரையாடல்களைத் தொடர்ந்து பார்த்து வரலாம்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வு முதல் யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்.) தேர்வு வரை, எல்லாப் போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமாக செய்ய வேண்டிய ஒரு 'வேலை' இருக்கிறது. 'ஆல் இந்தியா ரேடியோ' - ஓர் அரசு நிறுவனம். அவ்வப்போது பல செய்தி அறிக்கைகளை ஒலிபரப்பு செய்கிறது. இவை அனைத்தினும் பிரதானமானது, நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகும், ஆங்கிலச் செய்தி அறிக்கை. இன்று யாரெல்லாம் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அலுவலராக வலம் வருகிறாரோ, அவரெல்லாம், 'ரேடியோ' செய்தி கேட்டு தேர்ச்சி பெற்றவர்தான். மறந்து விட வேண்டாம். இப்போதெல்லாம் 'மொபைல்' போனிலேயே கூட, வானொலி கேட்கிற வசதி வந்து விட்டது.  எக்காரணம் கொண்டும், இரவு 9 மணி செய்தி அறிக்கையைத் தவற விடவே கூடாது.  'நடப்பு நிகழ்வுகள்' பகுதிக்கான வினாக்கள் அனைத்துக்கும், இந்தச் செய்தி அறிக்கையில், விடை கிடைக்கும்.

குரூப்4 தேர்வுக்கு அப்பால், இதற்கு மேலும் முயற்சி செய்து உயர் நிலைக்குச் செல்ல வேண்டும் என்கிற விருப்பம் உடையவர்கள், இரவுச் செய்தி அறிக்கையின் நிறைவில், 15 நிமிடங்களுக்கு வரும், செய்திக் கட்டுரை / உரையாடலையும் கேட்கலாம். ரேடியோ கேட்கும் போதே, குறிப்பு எழுதி வைத்துக் கொள்ள முடியுமானால், மிகவும் நல்லது.

ஒரு சந்தேகம். ஆங்கிலச் செய்தி அறிக்கை - புரியுமா...?

ஓர் இனிப்பான செய்தி. ஆல் இந்தியா ரேடியோவின் ஆங்கிலச் செய்தி அறிக்கைகள், எல்லாருக்கும் புரியும் வகையில், எளிமையாக, தெளிவாக, நிதானமாக வழங்கப்படுகின்றன. பொது அறிவுடன் ஆங்கில அறிவும் வளர்த்துக் கொள்ளலாம். மற்ற பிற பகுதிகள் அளவுக்கு, கடந்த ஆண்டுகளின் வினாக்கள், உதவிகரமாக இருக்காது. ஆனால், தேர்வில் நடப்பு நிகழ்வுகள் பற்றிய கேள்விகள் எது மாதிரி இருக்குமென்று, ஒரு பொதுவான, மேலோட்டமான கருத்து உருவாக, கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பார்த்து வைக்கலாம். நடப்பு நிகழ்வுகளுடன், எல்லாப் பகுதிகளையும் பற்றிய, ஒரு பொதுவான பார்வை பார்த்து முடித்து விடுவோம்.